புகைப்படக் கலை குறித்து அத்துறை வல்லுனர்கள் தமிழில் எழுதுவதும், அது புத்தக வடிவில் வெளிவருவது என்பதும் தமிழகத்தில் மிகவும் அரிதான காரியம்.
மிகக் சிலரால் தமிழில் புகைப்படக் கலை பற்றிய புத்தகங்கள் வந்திருக்கின்றன... அது போதுமான அளவில் இல்லை என்பதே அடிப்படைக் கருத்து.
நமது புகைப்படக் கலைஞர்களிடத்தில் வாசிப்பு பழக்கம் மிகக் குறைவு. இது ஒரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய குறைபாடும் ஆகும்.தொடர் வாசிப்பும்,தொடர் கற்றலும்,தொடர் பயிற்சிகளுமே..நமது புகைப்படக் கலைத்துறையின் உறுதியான ஆரோக்யமான வளர்ச்சிக்கான அடிப்படை. இதில் மாற்றுக் கருத்துகளுக்கு கண்டிப்பாக இடமில்லை.
நமது கலைத்துறையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு.. அத்திப் பூத்தார் போல்.. ஒரு அறுசுவை அறிவு விருந்தொன்று தகுதி மிகுந்த ஒரு படைப்பாளியிடமிருந்து வருகிறது..
ஆம் தொழில் முறை சொந்தங்களே...
நமது தமிழகத்தின் மதிப்பிற்குரிய ஆசிரியர்களில் ஒருவரான திரு.அமிழ்தினி தனசேகரன் அவர்களின் "குவியம்" என்ற புகைப்படக் கலைத் துறைக்கான புத்தகம் ஒன்று வெளிவர இருக்கிறது. நேராக புகைப்படக் கலையை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காமல்.. நமது மண்ணின் தன்மைகளுக்கேற்ப இங்குள்ள புகைப்படத் தொழிலின் அடிப்படைகள் மீதான புரிதல்களுடனும், பிரச்னைகளுடனும் போராடிக் கொண்டிருக்கும் சக புகைப்படக் கலைஞன் மீது நேர்மையான பரிவு கொண்டு.. அவன் தன்னை சரியாகத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனித்த தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் உண்மையான அக்கறை கொண்ட மிகச் சில ஆசிரியர்களில் திரு.அமிழ்தினி தனசேகரன் அவர்களும் ஒருவர்.அவரது அருமையான படைப்புதான்.. "குவியம்"
நம்மிடையே வாசித்தல் பழக்கத்தை வளர்த்தல் வேண்டும். முறையான தொடர்ச்சியான கற்றல் பழக்கத்தை வளர்த்தல் வேண்டும். தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு நம்மை மேம்படுத்தி தகவமைத்துக் கொள்ள முயற்சிகள் வேண்டும்.
"குவியம்" புத்தகத்தை வரவேற்போம்.. "குவியம்" நமது வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தட்டும்.. "குவியம்" வருக.. பயன் தருக..
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...!
ஒரு மனிதன் கற்கும் கல்வியானது அந்த மனிதனுக்கு மட்டுமல்லாமல், அவரைத் தொடரும் சந்ததியினருக்கும் தொடர் சங்கிலிபோல பயன்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால்தான் கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.அப்படிப்பட்டக் கல்வியைக் கற்றுக்கொடுப்பது என்பது மிகவும் பண்பட்டதொரு நிலையாகும்.கல்வி கற்பதே உயர்ந்த நிலை என்றால், கல்வி கற்றுக்கொடுப்பது என்பது அதைவிட உயர்ந்த நிலையாகும்.
ஒரு நூல் எழுதுவது என்பது தான் கற்ற கல்வியை, அனுபவத்தை, பட்டறிவை, தேடலை, பயிற்சியை மற்றவர்களுக்கு பங்களிப்பதாகும். அது வெறும் பங்களிப்பாக இல்லாமல் சுவையுடன் கூடிய விருந்தளிப்பாக இருப்பின் இன்னும் சிறப்பு. அப்படிப்பட்ட ஒரு நூலைத்தான் எனது அன்பு மாணவர் திரு ‘அமிழ்தினி தனசேகரன்’ அவர்கள் படைத்துள்ளார். தான் கற்ற புகைப்படக்கலை அனுபவத்தை பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக அழகிய வண்ணப்படங்களுடன் உருவாக்கம் செய்துள்ளார். இந்நூலில், இணையவெளியில் இருந்து எடுக்கப்பட்டப் படங்களாக இல்லாமல் தன்னால் எடுக்கப்பட்டப் படங்களாக இருப்பின் சிறப்பு என்று அவர் எண்ணியது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
அதற்காக நிறைய உழைத்துள்ளார் என்பதே உண்மை. ஒவ்வொரு படத்திற்கும் லொகேஷன்களை தேடி அலைந்து சரியான ஒளிக்காகக் காத்திருந்து படங்களை எடுத்துள்ளார்.இதைவிட மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால், ஒரு தொழில்நுட்ப நூலை தமிழில் மட்டுமே வெளியிடவேண்டும் என்பது அவரது வேட்கை.
அது ஒரு வேங்கையின் பாய்ச்சலாக வேகமெடுத்ததால், ஒவ்வொரு வேற்றுமொழி வார்த்தை மீதும் பாய்ந்து அற்புதமாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார். பொதுவாக தொழில்நுட்ப நூல்களை எழுதும்பொழுது, உள்ளது உள்ளபடி வேற்றுமொழி வார்த்தைகளை அப்படியே பிரயோகித்து கடந்து செல்வர். ஆனால், ‘குவியத்தில்’ அப்படி நீங்கள் காண்பது அரிது.
‘வொயிட் பேலன்ஸ்’ என்றால் அதை அழகிய தமிழில் நீங்கள் இங்கு வாசிக்கலாம், ‘போலரைஸர்’ என்றால் அதற்கும் தமிழில் ஒரு புது வார்த்தை. நீங்கள் அந்த வார்த்தைகளை வாசிக்கும்போதே உங்களுக்குள் நீங்களே விளங்கிக்கொள்வீர்கள். அப்படி அற்புதமான தமிழ்ச் சொற்களைத் தேடித்தேடி பிரயோகம் செய்துள்ளார். இப்படி எண்ணிலடங்கா வார்த்தைகள் குவியத்தில் குவிந்துகிடக்கின்றன.
ஒரு தொழில்நுட்ப வார்த்தையை தமிழ்ப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதன்று. அதுவும் மிக எளிமையாகப் புரியும்படி கொடுப்பது என்றால் மிகப்பெரிய தேடலும் ஆய்வும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
வரைபடங்களுக்கென்று தனிக்கவனம் செலுத்தி அதற்கான பெரும் உழைப்பையும் உழைத்துள்ளார். அன்புத்தம்பி கருவை.முருகு அவர்களின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் காவியங்கள். பாராட்டியே ஆகவேண்டும். பொதுவாக புகைப்படம் தொடர்பான வரைபடங்கள் மற்றும் விளக்கப் படங்கள் மேல்நாட்டு கலாச்சாரத் தழுவலாகவே இருக்கும். ஆனால் கருவை.முருகுவின் படங்கள் கருத்தாழம் மிக்க தமிழ்க் கலாச்சாரத்த்துடன் கூடிய அழகிய படங்கள்.
மிக அதிக உழைப்பிலும் பொருள் முதலீட்டிலும் வெளிவந்து தற்பொழுது தங்களது கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கும் ‘குவியத்தின்’ மீது உங்கள் கவனத்தை நீங்கள் குவித்தால், உங்கள் படைப்பாற்றல் சிறகுகள் விரியும் என்பது திண்ணம்.
வாழ்த்துகள் நண்பர்களே... வாசித்துப் பயனடையுங்கள்...!
‘சித்திரமும் கைப்பழக்கம்’. எந்த ஒரு கலையிலும் எடுத்த எடுப்பில் அதன் உச்சிக்கு ஒருவராலும் சென்றுவிட முடியாது. அஃது புகைப்படக்கலைக்கும் பொருந்தும்தானே.
இன்றோ, அறிவியலின் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் வெகு குறைவான காலத்திற்குள்ளாகவே, புகைப்படத்துறையினை அதீத வளர்ச்சிக்கு இட்டுச்சென்றுள்ளது. ஊருக்கு ஒருவர், இருவர் என இருந்த புகைப்படக்கலைஞர்கள் இன்று வீட்டுக்கு ஒருவர் எனும் நிலை. எல்லாம் இந்த கைபேசியின் அதனுடனான கேமராவின் மாயாஜாலம். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து, இக்கலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தாலும் அக்கலையின் அடிப்படைகளைத் தெரிந்து, புரிந்து படம் எடுக்கின்றனரா? என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே.
அந்த அடிப்படைத் தேவைகளை ஒருவர் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நண்பர் ‘அமிழ்தினி தனசேகரன்’ எடுத்துக்கொண்டுள்ள அரிய முயற்சியின் விளைவே இந்த நூல்.
கற்பித்தலில் கற்பதும் அடங்கியுள்ளது (Teaching involves learning). ‘அமிழ்தினி தனசேகரன்’ இக்கலையினைப் பற்றிக் கற்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். தொடர்ச்சியாகக் கற்பதில் களமிறங்குபவர். எனவே அவர் கற்பித்தலில் ஈடுபாடு கொள்வது இயற்கையே.
ஆனால் இக்கலையினை எழுத்து மூலமாக, நூலாகக் கற்பிக்கத் தருவதில் உள்ள சிரமம் நானறிவேன். அதனை மிக இலகுவாக ‘அமிழ்தினி தனசேகரன்’ இந்நூலில் செய்து இருக்கிறார்.
இந்நூலில் ஆங்காங்கே தந்துள்ள தகுந்த மாதிரிப் புகைப்படங்கள், வாசகர்களின் கற்றலைச் செம்மைப்படுத்தும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. Raw தொடர்பான பகுதி பலருக்கு, இன்றும் இருக்கும் ஐயங்களைத் தெளிவாகத் தீர்க்கும்.
புகைப்படக்கலை தொடர்பாக தமிழ் மொழியில் சில நூல்களே உள்ளன என்ற நிலையில் அதனுடன் இந்த இந்த நூலும் சேரும்போது மிகுந்த மகிழ்வடைகிறேன்.
புகைப்படக்கலைக்கான களம் கடல் போல் விரிந்தது. நீச்சல் தெரிந்து, நீந்தி மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். அந்த நீச்சலையும் மூழ்கி முத்து எடுத்தலையும் இந்நூல் சிறப்பாகக் கற்பிக்கின்றது எனில் அஃது மிகையல்ல.
எளிய தமிழில் புகைப்படக்கலையினைக் கற்பிக்கும் இந்த நூல் பலரது புகைப்படக்கலை ஆர்வத்தினை இன்னும் ஆழமாய்த் தூக்கிச்செல்லும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.
தொடரட்டும் அவரது கற்பித்தல் பணி. அவரது அடுத்த நூலினையும் விரைவில் எதிர்பார்க்க விழைகிறேன். வாழ்த்துக்கள் ‘அமிழ்தினி தனசேகரன்’.
‘அமிழ்தினி தனசேகரன்’ என்ற பெயர் தமிழகத்தின் பெரும்பாலான எளிய கலைஞர்களுக்கு பிடித்தமான, ஒரு நெருக்கமான பெயர் என்றே சொல்லலாம்.
ஏனென்றால் போட்டோகிராபி என்று சொன்னாலே இங்கு டெக்னாலஜி குறித்தும், உயர்ரக கேமரா, ( Accessories )அக்சஸரீஸ் வாங்குவது குறித்தும் விலை உயர்ந்த கேமரா உபகரணங்களைக்கொண்டு படம் எடுக்கும் விசயங்கள் குறித்தும் உரக்கப் பேசிக் கொண்டு நகர்கிறது இன்றைய நவீன ஒளிப்படக்கலை .
இப்படிப்பட்ட காலகட்டங்களில் போட்டோகிராபி குறித்த அடிப்படை நுணுக்கங்கள், கலையம்சங்கள், ரசனைகள், காட்சி அமைப்புகள், வண்ணங்கள், ஒளியின் திசைகள், ஒளியின் குணங்கள், காட்சிப்படுத்தும் விதங்கள், தான் காட்சிப்படுத்தவேண்டிய விஷயங்களை ரசித்தல் இப்படியான போட்டோகிராபிக்குத் தேவையான அடிப்படை விஷயங்களைப் பேச பெரும்பான்மையானோர் இல்லை.
ஆனால் இப்படிப்பட்ட சூழல்களுக்கு மத்தியில் ஒளிப்பட கலையின் முக்கியத் தேவையான போட்டோகிராபியின் உயிர் ஒளிந்திருக்கும் இடம் என்று சொல்லக்கூடிய அடிப்படைகள், உணர்தல், ஒளியை உள்வாங்குதல், கம்போசிஷன், பிரேமிங் ஆகியவை குறித்த, ஏகப்பட்ட விசயங்களை நாள்தோறும் அனைத்துக் கலைஞர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு மகத்தான மாமனிதர் என்று ‘அமிழ்தினி தனசேகரன்’ அவர்களைச் சொல்லலாம்.
இந்த புத்தகம் முழுக்க முழுக்க தமிழிலேயே இடம்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக இந்தப் புத்தகத்தில் தமிழில் இடம்பெறும் வார்த்தைகள் உதாரணமாக, ஒளிப்படத்தின் உயிர் உருவாக்கம், வெள்ளைச் சமநிலை, காட்சியின் தெளிவுத் தூரம், குவியத் தூரம், லென்ஸ் வடிகட்டிகள், நினைவுத் தேக்க அட்டை என்று படிக்கும்போது முதல் முறை கடினமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப படிக்கும்போது எனக்குள்ளே தங்கிப் போன அந்த வார்த்தைகளை உணர முடிந்தது.
‘குவியத்தை’ வாசித்த பின்பு நாம் இந்த போட்டோகிராபி துறையில் அன்றாடம் உச்சரிக்கும் வார்த்தைகளின் முழு அர்த்தங்களையும் புரிதல்களையும் உணரத்துவங்குவோம்.
‘குவியம்’ என்ற பெயருக்கு ஏற்றார் போல இந்நூல் நம் ஒட்டுமொத்த கவனத்தையும் ஒளிப்படக்கலையின்மேல் குவித்து நம்மை ஒரு சிறந்த ஒளிப்பட கலைஞனாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
குவியட்டும் சிறந்த ஒளிப்படக்கலை, ‘குவியம்’ வாயிலாக.
நீங்கள் புகைப்படம் குறித்து கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா ?
புகைப்படம் என்பது டேபிள்வொர்க் மட்டுமே இல்லை. அதைதாண்டி ஒரு கலை என்பதை உணர்திருக்கிறீர்களா ?
புகைப்படம் என்பது கருவிகளின் விலையில் மட்டுமே இல்லை, பயன்படுத்துவோர் கைகளில் இருக்கிறது என்பதை உணர்ந்ததுண்டா ? உங்களுக்காக ஒரு புத்தகம் வருகிறது. #குவியம்.
தோழர் அமிழ்தினி தனசேகரன் அவர்களின் புகைப்பட கலை சார்ந்த புத்தகம். புத்தகத்தில் சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். அது சொல்லவரும், உருவாக்க விழையும் மாற்றங்களை உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு புகைப்பட கலைஞரும், காதலரும் வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகம்.
கூடுதலாக இன்னொரு முயற்சியை தோழர் செய்திருக்கிறார். எனக்கு அதில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒரு தமிழ் ஆர்வலன் என்ற வகையில் அந்த முயற்சியை பாராட்டுகிறேன். ஆமாம் புகைப்பட கருவி சார்ந்த தொழில்நுட்பங்களை முடிந்தவரை தமிழில் சொல்லியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பில் இருந்து அது தொடர்கிறது.
புகைப்பட கலையில் இது ஒரு ஆவணம் என நம்புகிறேன். 98% கலரில் வருகிறது. கூடுதலாக தனிப்பட்ட புகைப்படங்கள் மூலம் முழுமையான பயிற்சி கையேடு, அல்லது நாம் சேகரித்த தொழில் நுட்பத்தோடு உரையாடும் ஒரு புத்தகம்.
வணக்கம் திரு.அமிழ்தினி தனசேகரன். வாழ்த்துக்கள் முதலில் !
புத்தகம் எழுதி வெளியிடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதிலும், தமிழில் ஒரு ஒளிப்பட தொழில் நுட்ப புத்தகம் என்பது மிகப் பெரிய சவால். இது, ஒரு தாய் பத்து மாதங்கள் குழந்தையை சுமந்து பிரசவிக்கும் வலியை விட மிக கடினமானது. ஏற்கனவே மூன்று புத்தகங்களை பிரசவித்ததால் அதன் வலியை நன்கு அறிந்தவன் நான். புத்தகம் வாசித்தலே மிக அரிதான இந்த காலத்தில், ஒளிப்படம் எடுத்தல் குறித்த 'குவியம்' புத்தகத்தை எழுதி வெளியிட்ட உங்களின் அளவில்லா தைரியத்துக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள்..வணக்கங்கள். 'குவியம்' புத்தக உள்ளடக்கத்தின் பல தகவல்கள், சமூக வலைதள ஊடகங்களில் எளிதாகவும், இனாமாகவும் கிடைக்கும் என்றாலும், உங்களின் எண்ணங்களின் வெளிப்பாடாக, உங்களின் எழுத்து நடையில் என்னும் போது, அதற்கு ஒரு தனி சிறப்பு கிடைத்து விடுகின்றது! நடைமுறை பழக்கத்தில் இல்லாத தொழில் நுட்ப தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் எனும் போது, தாய் மொழியில் கற்றல் எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதும் உறுதிப்படுத்தபடுகிறது. வாழ்த்துகள். புத்தகத்தில் பயன்படுத்தி இருக்கும் பல ஒளிப்படங்கள்; இயல்பு தன்மையுடன் இருப்பதால், படிப்பவர்கள் அவற்றை எளிதாக தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளவும் முடியும். புத்தகத்தில் பயன்படுத்தி இருக்கும் எழுத்துருக்கள் (fonts), மற்றும் அதன் அளவும் (size)படிப்பதற்கு எளிதாக இருக்கிறது. 'குவியம்' உருவாக, உங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக சம்பந்தபட்டவர்கள், உதவியவர்கள், உங்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் என அனைவரையும் மறக்காமல் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கும் உங்கள் பாங்கும் கட்டாயம் பாராட்டப்படவேண்டும். பொருளடக்கத்தின் ஓட்டம் (order of the content and flow), தலைப்பு வாரியாக பார்க்கும் போது, இயலபாக கற்றுக்கொள்ளும் வரிசையில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புத்தகத்தின் அளவு (aspect ratio ) கொஞ்சம் சதுர வாட்டமாக இருப்பதால், நெடுவரிசை (column ) பிரிக்கப்படாத பகுதிகள் மற்றும் பக்கங்கள் படிப்பதற்கு சிலருக்கு சற்று சிரமமாக இருக்கலாம். புத்தகத்தின் உள்ளடக்கத்தை, அது யாரிடம் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தை பார்க்கும் போது, நான் வெகுவாக பாராட்ட வேண்டியது உங்களின் சீரிய எண்ணங்களும், கடின உழைப்பும் தான். உங்களின் இந்த படைப்பு 'குவியம்', தமிழ் அறிந்த அனைத்து ஒளிப்பட கலைஞர்களுக்கும் பயனுள்ளதாக அமையட்டும். எல்லா படைப்பாளிகளுக்கும் தோன்றுவது போல, படைப்புகள் வெளி வந்தவுடன்...."ஆஹா..இதை இப்படி செய்திருக்கலாமே, அப்படி செய்திருக்கலாமே, என்ன.. இப்படி பண்ணிட்டோமே.." என பல விஷயங்கள் நமக்கு புதிர் போடுவது போல் இருக்கும். தவறவிட்ட விஷயங்களை அடுத்த படைப்பில் பார்த்து கொள்ளலாம்... இப்போது முன்னேறி செல்லுவோம்! வாழ்க வளமுடன்Amilthini Books © Allrights Reserved